Tuesday, March 21, 2017

Cancer

சத்தியமங்கலம்: தடுப்பூசி ரத்தக்கட்டு, கேன்சர் கட்டியாக வளர்ந்ததால், 6 வயதுசிறுவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், கொமரபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28; மனைவி சுசீலா, 24. இவர்களின் மகன் அன்பரசு, 6; குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அங்கன்வாடி மையத்தில், அம்மை தடுப்பூசி, சிறுவனின் வலது தொடையில் போட்டனர்.
ஊசி போட்ட இடத்தில், சிறிய ரத்தக்கட்டு உருவானது. நாளடைவில் சரியாகி விடும் என, கருதினர். ஆனால், 2 வயது வரை சிறிதாக இருந்த ரத்தக்கட்டு, குழந்தையுடன் சேர்ந்து கட்டியாக வளர்ந்தது. சிறுவனுக்கு தற்போது, 6 வயதாகும் நிலையில், 3 கிலோ எடையில், கேன்சர் கட்டியாக மாறியுள்ளது.
கட்டட கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன், இதுவரை, மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தும், குணமாக்க முடியவில்லை.சக குழந்தைகளை போல, அன்பரசுக்கும் பள்ளி செல்லும் ஆசை எழுந்துள்ளது. 'உடல்நிலை எப்போது சரியாகும்; நான் எப்போது பள்ளி செல்வேன்' என அவன் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், ஏழை பெற்றோர் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தாய் சுசீலா, கண்ணீருடன் கூறியதாவது: ரத்தக்கட்டு, கட்டியானவுடன் மருத்துவர்களிடம் காட்டினோம். சாதாரண கட்டி தான்; நாட்கள் செல்ல செல்ல கரைந்து விடும் என்றனர். ஆனால், 3 கிலோ எடையில் கேன்சராக மாறி விட்டது. நாங்களும் பார்க்காத மருத்துவம் இல்லை. 'கேன்சர் கட்டி இருக்கும் காலை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். எங்களிடம் இதற்கு மேல் வைத்தியம் பார்க்க வசதியில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம், அரசு தரப்பில், உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உதவ நினைப்பவர்கள், 83445 45882, 89034 17882 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1734573